Showing posts with label . Show all posts
Showing posts with label . Show all posts

Tuesday, June 26, 2012

'ழ' - தமிழரின் நாப்பழக்கம்

"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்."

'ழ' கபே: சுவரும்  சுற்றமும் சித்திரமாய் தமிழ் மணக்க, சுண்டலும் சிக்குக்காபியுமாக நாவிலும் தமிழ் மணமே. 




போரூர் 'ழ' கபே: நண்பர்களின் 'ழ'-கரத்தை பிழை திருத்தி நா-பிரண்டு போக, நாக்கு வறண்டு விட்டது என தமிழ் உணவு பரிமாறல் தொடங்கியது. முதல் தட்டிலேயே கல்லூரி காலத்தில் அந்த டீக்கடையில் அகவுன்ட் வைத்து ருசித்தப் பதார்த்தங்களும், பள்ளிப்பருவத்தில் எட்டணாவுக்கு பாட்டி கையில் வாங்கிய பண்டங்களும் அடுக்கடுக்காய் அணிவகுத்தன.

பொறி உருண்டை, கடலை மிட்டாய், அரிசி மிட்டாய், பல்லி மிட்டாய், எள்ளு உருண்டை, ரஸ்க், பிஸ்கட் வகைகள் என ஒரு புறம விரல் இனிக்க; வாழைப்பூ வடை, மிளகாய் பஜ்ஜி என சுவை சுரப்பிகளின் தேவைகள் சமன் செய்யப்பட்டது. கூடவே நொறுக்க கடலையும் பட்டாணியும்.





நாவுக்கும் விரல்களுக்கும் சிறு ஒய்வு தேவை எழ, ஆங்க்ரி பேர்ட்ஸிலும், எக்ஸ் பாக்சிலும் தொலைந்து போன சிந்தனைகளுக்கு ஆறுதலாக பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம், பரமபதம், தாயம் - என கிராமத்து விடுமுறைகளை நினைவு கூறிய சில விளையாட்டுகளை கை பார்த்தோம்.

  • இசைஞானியின் முடிவில்லா - திகட்டா இசை..
  • கரகாட்டக்காரன் "சொப்பனசுந்தரி", வைகைப்புயல் வடிவேலுவின் "கைய புடிச்சு எழுத்தியா?" - போன்ற மறக்க முடியாத முத்துக்களை நினைவு கோறும் கலை அமைப்பு..
  • "ஜலபுல ஜன்க்ஸ்", "டிக்கிலோனா", "ஸ்பூன் லிங்க்ஸ்" என பெயரிட்ட குளிர்பானங்கள்..
- இவை வேறு எந்த நவீன "Coffee Shop"-களிலும் கிடைக்காத தமிழ் சினிமா ரசிகர்குளுக்கான தாயின் மடி சுகம்.

 பேச்சுக்கும், சிரிப்புக்கும் இடையே, அடை - வெல்லம், இனிப்பு/கார அவல், அதிரசத்தில் வாழைப்பழமும் தேனும் சேர்ந்த இனிப்பு என பெயர் மறந்து போன பல பலகாரங்கள் அணிவகுத்தன.





தமிழ்நாட்டு உணவுப்பண்டங்களும் நொறுக்குத்தீனிகளும் தேநீர் கடைகளையும், தட்டுக்கடைகளையும் தாண்டி சுகாதாரணமான முறையில் பரிமாற வேண்டும், இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உணவகத்தை தொடங்கியதாக கூறினார் அதன் நிறுவனர்களின் ஒருவரான அரசி.

பேச்சும் உணவும் சேர்ந்து தாகம் தொடங்க, நீண்ட இடைவெளிக்குபிறகு "நன்னாரி சர்பத்". நாக்கை பல், உதடு என கிடைத்த இடைவெளியில் எல்லாம் விட்டு சுவைத்துத் திளைத்தேன். ரோஸ் மில்க், பனங்கற்கண்டு பால், சுக்குக் காபி, கருப்பட்டி காபி, என பானங்களின் அம்சங்களிலும், நகர வாழ்க்கையினின்று வெகுதூரம் பயணித்த உணர்வு.




குளிர்ச்சியில் கிளர்ச்சியாக குல்பி!!



பாரம்பரிய மற்றும் சிறுநகர உணவுகளோடு, காட்டி ரோல், சுண்டல் சாண்ட்விச், மாகி நூடில்ஸ், சீஸ் பால்ஸ் போன்ற நவீன மற்றும் கலப்பு செய்யப்பட உணவுகளும் கிடைக்கின்றன.

'ழ' - நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு கிராமுத்து விடுமுறை அனுபவித்த பரவசம்.